செவ்வாய், 24 ஜூலை, 2012

.

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
.
...وَكُلُواْ وَاشْرَبُواْ حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ مِنَ الْفَجْرِ

...வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்!... திருக்குர்ஆன் 2:187 


ஸஹ்ர் உணவை தாமதப்படுத்தி உண்போம். 
.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஸஹர் உணவு உண்பது சிறந்தது
''நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!'' 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 1923.

சாதாரண நாட்களில் காலையில் உண்ணக் கூடிய உணவு மூன்று அல்லது நான்கு மணி நேரமே தாக்குப்பிடிக்கும் லுஹர் தொழுது முடித்ததும் வேகமாக எழுந்துச் சென்று சாப்பாட்டில் அமர்ந்து விடும் அளவுக்கு பசி ஏற்பட்டு விடும்.

ஆனால் நோன்பு நாட்களில் அதிகாலை நேரத்தில் உறக்கத்தில் எழுந்து உண்ணும் சிறிய அளவிலான உணவு மக்ரிப் வரை தாக்குப்பிடிக்கிறதென்றால் கண்டிப்பாக அல்லாஹ்வுடைய அருள் இல்லை என்றால் முடியவே முடியாது அதனால் தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ''நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!''  என்றுக் கூறினார்கள்.  

உறக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் கூறிய நேரத்தில் ஸஹர் நேரத்து உணவை உண்டு அல்லாஹ்வின் புறத்திலிருந்து அபிவிருத்தியை அடைந்து உடலை சோர்விலிருந்து காக்க முயற்சி செய்வோம்.

ஸஹருக்கான நேரம்.
வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை  உண்ணுங்கள், பருகுங்கள் என்று வல்ல அல்லாஹ் நமக்கு ஸஹர் உணவை தாமதித்து உண்பதற்கு அனுமதி வழங்கி இருக்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும்  அல்லாஹ்வின் கட்டளைப்படி ஸஹர் உணவை மிகவும் பிற்படுத்தி உண்பவர்களாகவே இருந்துள்ளனர்.

''நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் செய்தோம், பின்னர் தொழுகைக்கு அவர்கள் தயாராகி விட்டார்கள்!'' என்று ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்  நான் 'பாங்குக்கும் ஸஹ்ருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது?' என்று கேட்டேன். அதற்கவர் 'ஐம்பது வசனங்கள் (ஓதும்) நேரம் இருந்தது!'' என்று பதிலளித்தார். நூல். புகாரி 1921. அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஐம்பது வசனங்கள் ஓதுவதற்கான நேரம் எவ்வளவு இருக்கும் என்பதை திருக்குர்ஆனை ஓதக் கூடியவர்கள் கணித்துக் கொள்வர்.

நவைத்து ஸவ்ம கதினும், இரவு 3 மணியும் ?
கடந்த காலங்களில் மக்கள் நவைத்து ஸவ்ம கதின்... என்ற பாடத்தை மனனம் செய்து வைத்துக்கொண்டு ஸஹர் உணவு உண்பதற்கான இறுதி நேரம் நள்ளிரவு மூன்று மணி என்ற வரையறையையும் ஏற்படுத்திக்கொண்டனர்.

ஸஹர் உணவை முடித்து நவைத்து ஸவ்ம கதின்.. பாடத்தையும் ஓதி விட்டால் அதற்கு மேல் எதையும் உட்கொள்ளக் கூடாது என்ற வழக்கமும் இருந்து வந்தது வல்ல அல்லாஹ்வின் கருணையால் தவ்ஹீத் பிரச்சாரம் மக்களிடம் பரவலாக சென்றடைந்தப் பிறகு ஓரளவு இது குறைந்து விட்டாலும் இன்னும் சில இடங்களில் இருப்பதாகவே அறிகிறோம். தொடர்ந்து இடை விடாமல் இதன் தீமையை விளக்கிக்  கூறி வந்தால் இன்ஷா அல்லாஹ் மக்களிடமிருந்து முழுமையாக விலகி விடலாம்.

திருமறைக்குர்ஆனில் இறைவன் ஒரு சட்டத்தைக்கூறி அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செயல் வடிவம் கொடுத்தப் பின்னர் அதற்கு மாற்றமான வேறொரு செயல் வடிவம் கொடுத்து செயல்படுவர்களின் மார்க்க அமல்கள் இறைவனிடம் நிராகரிக்கப்பட்டுவிடும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். 

'நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்பட்டதாகும்' என்று 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  கூறியதாக ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்''  நூல்: முஸ்லிம் 3541

நவைத்து ஸவ்மகதின் என்றப் பாடமும், 3 மணி வரை என்ற இறுதி முடிவும் இஸ்லாத்தில் இல்லாத செயல் என்பதால் இதை செய்வதால் இது ரத்து செய்யப்படும். ரத்து செய்யப்பட்டு விட்டால் நோன்பு நோற்றதற்கான நன்மைகள் இல்லாமல் போய் விடலாம் ?

நோன்பு என்பதே தூய்மை படுத்திக் கொள்வதற்காக அல்லாஹ் வழங்கிய அருட்கொடையாகும். அதிலும் தங்களது கை சரக்குகளைப் புகுத்தி விட்டால் எப்படி தூய்மை படுத்திக் கொள்வது ?

அல்லாஹ் கூறிய விதம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் ரமலானை அணுகினால் தான் தூய்மைப் படுத்தி கொள்ள முடியும் ! நன்மைகளை அறுவடை செய்து கொள்ள முடியும்.

இன்னும் இறைவனும், இறைவனின் தூதரும் கூறிய நேரத்தில் ஸஹர் செய்வதன் மூலமாகவே ஃபஜ்ரு தொழுகையும் ஜமாத்துடன் நிறைவேற்றும் பாக்கியம் கிடைக்கும். மூன்று மணிக்கு ஸஹர் செய்து விட்டு உறங்கி விட்டால் ஃபஜ்ரு தொழுகை தவறிவிடும் வாய்ப்பே அதிகம் இருக்கிறது.

அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் கூறிய நேரத்தில் ஸஹர் நேரத்து உணவை உண்டு ஃபஜ்ரு தொழுகையை அதன் நேரத்தில் தொழுது நோன்பை நோற்று அல்லாஹ்வின் அபிவிருத்தியை அடைந்து உடலை சோர்விலிருந்து காக்கவும் நன்மைகளை அடைந்து கொள்ளவும் முயற்சி செய்வோம்.


ஸஹர் நேரத்து சட்டங்களை அறிந்திட கீழ்காணும் லிங்கை சொடுக்கவும்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை: